Hey guys. I'm posting a content that my dad has created on Sundarar Thevaaram. The background of this Pathikam (song) is that, once Sundarar was walking a long way to have Darshan of Lord Shiva. When he reached a place called Thirukurukaavur, he was so thirsty and tired that he was on the verge of dying. Lord Shiva appeared in the form of a Brahmin in front of him and gave him food and water which saved his life. Sundarar praised Lord Shiva through this Pathikam.
Whoever recites this Pathikam will have no dearth of food, will have abundant wealth, and will live disease-free. My dad gave the meaning to each of the stanzas of this Pathikam. This article below is fully in Tamil, so sorry if you can't read it. Below is also a video of this Pathikam being sung by a devotee of Maha Periyava.
பதிகத்தின்
பின்னணி: (7th
Thirumurai: Pathigam No 29)
திருகுருக்காவூர்
வெள்ளடை என்ற ஒரு புனித தலம் (சீர்காழி அருகில்) இருக்கிறது. அடியார்கள் பலருடன் சுந்தரரமூர்த்தி நாயனார், பல தலங்களுக்குச் சென்று
சிவபெருமானை வழிபாட்டு, பதிகங்கள் பல பாடி
நடைபயணமாக இந்தஊருக்கு வருகிறார்.
அப்பொழுது அவருக்கு மிகவும் பசி, தாகம் எடுக்கிறது. சிறிதேனும் உணவு, தண்ணீர்
கிடைக்க்கவில்லையேல் உயிர் பிரிந்துவிடும்
போன்ற நிலை. கருணாமூர்த்தியான சிவபெருமான், ஒரு அந்தணர் உருவில்
தோன்றி, சுந்தரரிடம், - "இங்கு ஒரு தண்ணீர் பந்தல்
இருக்கிறது, நீங்களோ மிகவும் களைப்பாக
இருக்கிறீர், வந்து உணவு, நீர் ஏற்றுக்கொண்டு
சிறிது களைப்பு நீங்கியபின் செல்லுங்கள்" என்று வேண்டுகிறார். சுந்தரரும் மற்ற அடியார்களும் அவ்வாறே
செய்கின்றனர். விழித்து எழுந்தபின்
பார்த்தால், அங்கு தண்ணீர் பந்தலையும்
காணோம், வந்த வேதியரையும்
காணோம். உயிர் போகும் தருவாயில், அந்தணர் உருவில் எதிரில் வந்து
தனக்கு உணவும் (பொதி சோறு), நீரும் கொடுத்து உயிரைக் காப்பாற்றியது, திருகுருக்காவூர் வெள்ளடை
தலத்தில் உறையும் சிவபெருமானே என்பதால் அவர் மேல் இந்த பதிகம் பாடுகிறார். இந்த
பதிகத்தை பாடுபவர்களுக்கு ஒருநாளும், உணவு கஷ்டம் வராது. ஒருவியாதியும் வராது. சிவகடாக்ஷம் ப்ரத்யக்ஷமாக கிடைக்கும்.
பாடல்களின் விளக்கத்தைப் பாப்போம்!
பாடல் 1:
இத்தனை
ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்!
“பித்தனே” என்று உன்னைப்
பேசுவார், பிறர் எல்லாம்;
முத்தினை, மணி தன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த
வித்தனே!
குருகாவூர் வெள்ளடை நீ அன்றே; .
பதவுரை:
குருகாவூர்
வெள்ளடை எம்பெருமான் - திருக்குருகாவூர்
வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எங்கள் சிவபெருமானே!
இத்தனை
யாமாற்றை அறிந்திலேன் - உனது இந்த திருவருள் செயலுக்கும் பெரும் கருணைக்கும் ஆன
காரணத்தை நான் அறிந்திலேன் [அதாவது, தக்க சமயத்தில் வேதியர் உருவில் வந்து, உணவும் (பொதி சோறு), தண்ணீரும் கொடுத்து, உயிரைக் காப்பாற்றிய
பெரும்கருணைக்கான காரணத்தை, யான் அறிந்திலேன் ]
பித்தனே
என்றுன்னைப் பேசுவார் பிறரெல்லாம் - உன்னுடைய உண்மையான இயல்பினை அறியாதவரெல்லாம், உன்னை 'பித்தன்' என்று இகழ்ந்து பேசுவர். [அவரகள ஒருபுறம் இருக்கட்டும். அறியாதவர்கள்.
திரித்துக் கூறுகிறார்கள்]
நீ
யன்றே - ஆனால் நீயோ
முத்தினை
மணிதன்னை மாணிக்க முளைத்தெழுந்தவித்தனே - முத்தையும் மாணிக்கத்தையும், பிற மணிகளையும்
தோற்றுவித்த வித்தாய் (மூல காரணமாய்) வெளிப்பட்டவன் அன்றோ! [சிவபெருமானே தன்
அடியார்களுக்கு அரும்பெருஞ் செல்வமாக இருக்கிறார் என்பது கருத்து]
விளக்கவுரை:
திருக்குருகாவூர்
வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எங்கள் சிவபெருமானே! தக்க சமயத்தில் வேதியர் உருவில் வந்து, உணவும் (பொதி சோறு), தண்ணீரும் கொடுத்து, எங்கள் உயிரைக்
காப்பாற்றிய தங்களின் பெரும்கருணைக்கான காரணத்தை, யான் அறிந்திலேன். உன்னுடைய உண்மையான இயல்பினை அறியாதவரெல்லாம், உன்னை 'பித்தன்' என்று இகழ்ந்து
பேசுவர். அவர்கள் அறியாதவர்கள். உண்மையைத் திரித்துக் கூறுகிறார்கள். ஆனால் நீயோ, முத்தையும்
மாணிக்கத்தையும், பிற மணிகளையும்
தோற்றுவித்த வித்தாய் (மூல காரணமாய்) வெளிப்பட்டவன் அன்றோ. எங்கள் போன்ற சிவனடியார்களுக்கு நீயே
அரும்பெருஞ் செல்வமன்றோ!
பாடல் 2:
ஆவியைப்
போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்;
வாவியில்
கயல் பாய, குளத்து இடை மடைதோறும்
காவியும்
குவளையும் கமலம் செங்கழு நீரும்
மேவிய
குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பதவுரை:
வாவியில்
- சிறிய நீர் நிலைகளில்
கயல்
பாய - கயல் மீன்கள் துள்ளி விளையாட
குளத்திடை
மடை தோறும் - குளத்திலும் நீர் மடைகளிலும்
காவியுங்
குவளையுங்க மலஞ்செங் கழுநீரும் மேவிய -
கருங்குவளையும், செங்குவளையும், தாமரையும், செங்கழுநீரும் ஆகிய
பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும்
குருகாவூர்வெள்ளடை
- திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருக்கும்
நீ
அன்றே - சிவபெருமானே!
ஆவியைப்
போகாமே தவிர்த்தென்னை யாட்கொண்டாய் - நீயல்லவோ பொதிசோறும், தண்ணீரும் தந்து எங்கள்
ஆவியைப் போகாமே நிறுத்தியது !
விளக்கவுரை:
பார்க்கும்
இடங்களில் எல்லாம் சிறிய நீர் நிலைகளில் கயல் மீன்கள் துள்ளி
விளையாடிக்கொண்டிருக்கின்றன. குளங்களிலும், நீர் மடைகளிலும் நீலோத்பவம் (கருங்குவளை), செங்குவளை (சிவப்பு
அல்லி), தாமரை, செங்கழுநீர் போன்ற அழகிய
மலர்கள் பூத்து குலுங்கி நிற்கின்றன.
இவ்வளவு ரம்மியமான ஊராகிய திருக்குருகாவூர் வெள்ளடையில் குடிகொண்டிருக்கும்
சிவபெருமானே! நீயல்லவோ, தக்க சமயத்தில் வந்து, எங்களுக்கு பொதி சோறும், தண்ணீரும் தந்து எங்கள்
ஆவி போகாமல் தடுத்தாட்கொண்டாய்! தங்கள்
கருணையை நான் என்ன என்று போற்றுவது!
பாடல் 3:
பாடுவார்
பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்;
ஓடு
நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே!
காடு
நல் இடம் ஆகக் கடு இருள் நடம் ஆடும்
வேடனே!
குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பதவுரை:
ஓடு
நன் கலன் ஆக - கபாலமாகிய தலை ஓடே சிறந்த உண்கலமாக இருக்க
உண்
பலிக்கு உழல்வானே - பிச்சை ஏற்றுக் திரிபவனே
காடு
நல் இடம் ஆக - இடுகாடே சிறந்த இடம் என்று அதையே தன் இருப்பிடமாக ஏற்றுக்கொண்ட
கடு
இருள் நடம் ஆடும் வேடனே - கடுமையான இருளில் நடனமாடுகின்ற, வேடன் கோலத்தை உடையவனே
குருகாவூர்
வெள்ளடை - திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே
நீ அன்றே! - நீ அல்லவோ
பாடுவார்
பசி தீர்ப்பாய் - உன்னை இசைப் பாடல்களால் பாடுபவர்கள் பசியைத் தீர்ப்பாய் அன்றோ!
பரவுவார்
பிணி களைவாய் - மனதால் நினைத்து, பலவாறு உன்னை பக்தியால் துதிக்கும் அடியார்களின் நோயை வேரோடு களைவாய் அன்றோ!
விளக்கவுரை:
கைகளில்
கபாலத்தையே சிறந்த உண்கலமாகக் கொண்டு, பிச்சையெடுத்துத் திரியும் சிவபெருமானே! இடுகாடே சிறந்த இடம் என்று அதையே தன் இருப்பிடமாக ஏற்றுகொண்டவேனே! காரிருளில்
நடனமாடும் வேடனே! திருக்குருகாவூர்
வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே! சிவபெருமானே! உன்னைப் பலவாறும்
இசைப்பாடல்களால் பாடும் அடியார்களின் பசியை தீர்ப்பவரும், மனதால் நினைத்து உன்னை
பக்தி செய்யும் அடியார்களின் நோய்ப்பிணியை அடியோடு வேரறுப்பவன் நீ யன்றோ!
பாடல் 4:
வெப்பொடு
பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்;
ஒப்பு
உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை,
அப்படி
அழகு ஆய அணி நடை மட அன்னம்
மெய்ப்படு
குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பதவுரை:
ஒப்பு
உடை ஒளி நீலம் ஓங்கிய மலர்ப் பொய்கை - ஒன்றோடு ஒன்று நிகர் என்று
போட்டிபோட்டுக்கொண்டு நீல மலர்கள் ஒளி வீசிக்கொண்டு சிறந்து விளங்கும் பொய்கைகளில்
அப்படி
அழகு ஆய - மிகவும் அழகியானவைத் தோன்றுகின்ற
அணி
நடை மட அன்னம் - அழகிய நடை உடைய இளமையான அன்னப் பறவைகள் இருக்கின்ற
குருகாவூர்
வெள்ளடை - திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே!
சிவபெருமானே!
நீ
அன்றே! - நீயன்றோ
வெப்பொடு
- வெப்பு நோயோடு கூட
எனை
ஆட்கொண்டாய்; - என்னை வலிய வந்து ஆட்கொண்டாய்
பிணி
எல்லாம் தவிர்த்து - மற்ற நோய்கள் எல்லாவற்றையும்
நீக்கி
எனை
ஆட்கொண்டாய் - என்னை வலிய வந்து ஆட்கொண்டு உன்னுடையவனாக ஆக்கிக் கொண்டாய்
விளக்கவுரை:
சிவபெருமானே!
ஒன்றுக்கு மற்றொன்று நிகர் என்று கூறும்படி ஓங்கி வளர்ந்து
ஒளிவீசிக்கொண்டிருக்கும் நீல மலர்கள் பூத்திருக்கும் மலர்ப் பொய்கையில், அழகிய நடையை உடைய இளமையான
அன்னப் பறவைகளைக் கொண்ட எழில்மிகு
திருகுருகாவூர் வெள்ளடை கோயிலில் உறையும்
சிவபெருமானே! நீயல்லவோ என் வெப்பு
நோயையும் போக்கி, மற்ற எல்லா நோய்களையும்
நீக்கி என்னை வலிய வந்து ஆட்கொண்டு என்னை உன்னவன் ஆக்கிக்கொண்டாய்.
பாடல் 5:
வரும் பழி வாராமே தவிர்த்து, எனை
ஆட்கொண்டாய்;
சுரும்பு உடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண் நீற்றானே!
அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
சுரும்பு உடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண் நீற்றானே!
அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பதவுரை:
சுரும்பு உடை - கருவண்டுகளை உடைய
மலர்க்
கொன்றை - கொன்றை மலர் மாலையையும்
சுண்ண வெண் நீற்றானே! - பொடியாகிய சுத்த
வெண்மையான திருநீற்றையும் உடையவனே!
அரும்பு உடை மலர்ப் பொய்கை - அரும்புகளையுடைய
மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில்
அல்லியும் - பூத்திருக்கும் அல்லி
மலர்களையும்
மல்லிகையும் - ஆங்காங்கே மலர்ந்து
மணம்வீசிக்கொண்டிருக்கும் மல்லிகையையும்
விரும்பிய - கொண்டு விளங்குகின்ற
குருகாவூர் வெள்ளடை - திருக்குருகாவூர்
வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே
நீ அன்றே! . - நீயல்லவோ
வரும் பழி வாராமே தவிர்த்து -
திருக்கயிலையில் உனக்கு சேவை செய்துகொண்டிருந்த என்னை, மீண்டும்
பிறவிச் சூழலில் அகப்பட விடாமல் ஒழித்து
எனை ஆட்கொண்டாய்; - என்னை
தடுத்து ஆட்கொண்டனையே!
விளக்கவுரை:
கருவண்டுகள் மொய்க்கும் கொன்றை
மலர்மாலையையும், தூய திருவெண்ணீறை யும்
தரிக்கும் சிவபெருமானே! அல்லி மலர்கள் பூத்திருக்கும் பொய்கைகளையும், ஆங்காங்கே
மல்லிகை மலர்கள் மொட்டவிழ்ந்து மணம்பரப்பும் அழகிய குருகாவூர் வெள்ளடையில்
குடிகொண்டிருக்கும் சிவபெருமானே! நான் திருக்கயிலையில் நின்னருகே நின்று உனக்கு
சேவை செய்துகொண்டிருந்தும் , உன்னை
அடையாது பிறப்புச்சுழலில் மீண்டும் அகப்பட்டேன் என்ற பழி எனக்கு வராமல் ஒழித்து, என்னை
தடுத்து ஆட்கொண்டவன் நீ யல்லவோ!
பாடல் 6:
பண்
இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில் சுவை ஒப்பாய்!
கண் இடை மணி ஒப்பாய்! கடு இருள் சுடர் ஒப்பாய்!
மண் இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே,
விண் இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
கண் இடை மணி ஒப்பாய்! கடு இருள் சுடர் ஒப்பாய்!
மண் இடை அடியார்கள் மனத்து இடர் வாராமே,
விண் இடைக் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பதவுரை:
குருகாவூர்
வெள்ளடை - திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே! சிவபெருமானே
!
விண்
இடை - ஆகாசப் பரவெளியில் எங்கும் பரவியிருக்கும் நீ
மண்
இடை அடியார்கள் - இம்மண்ணுலகில் வாழும் உன் அடியார்களது
மனத்து
- மனத்தின்கண்
இடர்
வாராமே - யாதொரு துன்பமும் தோன்றாதவாறு
பண்
இடைத் தமிழ் ஒப்பாய்! - பலவிதமான பாடல்களில் (பண்களில்) தமிழின் இனிமை போலவும்
பழத்தினில்
சுவை ஒப்பாய்! - பழத்தினுள் சுவையைப் போலவும்
கண்
இடை மணி ஒப்பாய்! - கண்களின் கண்மணியைப் போலவும்
கடு
இருள் சுடர் ஒப்பாய்! - கடுமையான இருளில் ஒளிச்சுடர் போலவும்
நீ
அன்றே! - நிற்கின்றாயன்றோ!
விளக்கவுரை:
திருகுருகாவூர் வெள்ளடைக் கோயிலில்
வீற்றிருக்கும் சிவபெருமானே! உன் கருணையின் திறத்தை நான் என்ன என்று புகழ்வது? நீ
பரவெளியில் எங்கும் மேவி
நிற்கின்றாய். இம்மண்ணுலகில் உனையே
நினைந்திருக்கும் அடியார்கள் மனதில் குடிகொண்டிருக்கின்றாய். அவர்கள் மனதில் யாதொரு துன்பமும் இடரும் வாராது
காக்கின்றாய். தமிழின் இனிமைபோலவும், பழத்தின்
சுவையைப் போலவும், கண்ணின் மணியைப்போலவும், கடும்
இருளில் ஒளிச்சுடர் போலவும் சிவானந்தம் தரும் பொருளாய் திகழ்கிறா யன்றோ!!
பாடல் 7:
போந்தனை; தரியாமே
நமன் தமர் புகுந்து, என்னை
நோந்தன செய்தாலும், நுன் அலது அறியேன், நான்;
சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட
வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
நோந்தன செய்தாலும், நுன் அலது அறியேன், நான்;
சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட
வேந்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பதவுரை:
சாம்தனை
வருமேலும் தவிர்த்து - சாகும் நிலை (இறக்கும் நிலை) வரும் காலத்தையும் நீக்கி
எனை
ஆட்கொண்ட வேந்தனே! - என்னை ஆட்கொண்ட தலைவனே
குருகாவூர்
வெள்ளடை - திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில்எழுந்தருளியிருப்பவனே
தரியாமே - எனது துன்பத்தை நான் சிறிதும் பொறுக்க விடாமல்
போந்தனை
- உடனே அதைக் களைந்து, அவற்றை நீக்குபவன்
நீயேயன்றோ!
நமன் -
யமனுடைய
தமர் -
ஏவலாளர்கள் (எம தூதர்கள்)
புகுந்து
- என் முன் வந்து
என்னை
நோந்தன செய்தாலும் - நான் நோகும் படி துன்புறுத்தினாலும்
நான் -
உன்னடியேனாகிய நான்
நுன்
அலது அறியேன் - உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.
குருகாவூர்
வெள்ளடை - திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே!
நீயன்றே
- என் துன்பம் பொறுக்காமல் உடனே வந்து என்னை காப்பவன் நீயன்றோ!
விளக்கவுரை:
இறக்கும்
நிலை வரும் காலத்தையும் நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே! திருக்குருகாவூர் வெள்ளடைக்
கோயிலில் எழுந்தருளியிருப்பவனே! துன்பத்தை
நான் சிறிதும் அனுபவிக்க விடாமல் உடனே அதைக் களைந்து, அவற்றை நீக்குபவன்
நீயேயன்றோ! யமனுடைய ஏவலாளர்கள் என் முன் வந்து நோகும் படி என்னைத்
துன்புறுத்தினாலும் உன்னடியேனாகிய நான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக
அறியமாட்டேன்.
நீ
என்னை ஆட்கொண்டுவிட்டதனால், நான் இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கிவிட்டாய். நீயே
ஆஷுதோஷி! உன்னை வேண்டி நிற்கும்
அடியார்கள் சிறிதேனும் துன்புறுவதை நீ பொறுக்கமாட்டாய்! உடனே வந்த துன்பத்தை
நீக்கிவிடுவாய். ஆதலால், யமனின் ஏவலாளர்கள் என்
முன் வந்து என்னை துன்புறுத்த துணிவார்களேனும், நான் உன்னையன்றி
வேறொருவரை அறியமாட்டேன், திருகுருகாவூர் வெள்ளடைக்
கோயிலில் வீற்றிருக்கும் எம் தலைவனே! சிவபெருமானே!
(சிவனை அண்டியவர்களுக்கு
எமபயம் இல்லை என்பது கருத்து)
பாடல் 8:
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்து இடை மால்
தீர்ப்பாய்;
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னைக்
கலக்குவான் வந்தாலும், கடுந் துயர் வாராமே,
விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னைக்
கலக்குவான் வந்தாலும், கடுந் துயர் வாராமே,
விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பதவுரை:
மலக்கு
இல் - அங்கும் இங்கும் அலைபாயும் இயல்பு இல்லாமல் ஒருமனதுடன்
நின்
அடியார்கள் - உன்னை துதிக்கின்ற அடியார்கள்
மனத்து
இடை - மனதின் கண்
மால்
தீர்ப்பாய் - மயக்கத்தினையும், வாசனையையும் களைபவனே
சலச்சலம்
மிடுக்கு உடைய - துன்பத்தை தருகின்ற கடும் கோபமும் மிடுக்கும் உடைய
தருமனார்
தமர் என்னைக் கலக்குவான் வந்தாலும் - யமதருமன் தூதுவர்கள் என்னை அச்சுறுத்த
வந்தாலும்
கடுந்
துயர் வாராமே - அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன்
குருகாவூர்
வெள்ளடை நீ அன்றே! - குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் உறையும் சிவபெருமான் நீயே யன்றோ!
விளக்கவுரை:
உனையே ஒருமனதுடன் நினைக்கும் அடியார்கள் மனதின்கண்
உள்ள மயக்கம், குழப்பம் இவற்றை நீக்கி, நல்ல தெளிவைத் தந்து, யமதூதர்கள் வந்து
அச்சுறுத்தும் நோக்கில் வந்தாலும், அந்த துயரத்தை வராமலே விலக்கி எம்மைக் காப்பாற்றுபவன்
குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் உறையும் சிவபெருமான் நீயே யன்றோ!
(சிவபெருமானை வேண்டுவதால், நல்ல ஞானம், மனது தெளிவு, உண்டாகும். எமபயமே
நீங்கும் என்கும்போது சிறு துயர்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ? )
பாடல் 9:
படுவிப்பாய், உனக்கே
ஆள் பலரையும், பணியாமே;
தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே!
கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன் அடிக்கே
விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
தொடுவிப்பாய், துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே!
கெடுவிப்பாய், அல்லாதார்; கேடு இலாப் பொன் அடிக்கே
விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பதவுரை:
ஆள்
பலரையும் - மற்ற பல தெய்வங்களை
பணியாமே
- வணங்கி தொழாமல்
உனக்கே-
உனக்கே
படுவிப்பாய்
- ஆட்படச் செய்வாய்
தோல்
உடுத்து உழல்வானே! - நீயோ வெறும் தோலை உடுத்து, எலும்பு மலையை
அணிந்திருந்தாலும்
துகிலொடு
பொன் - (உன்னை வேண்டுபவர்களுக்கு) நல்ல ஆடைகளையும், பொன் அணிகளையும்
தொடுவிப்பாய்
- அணிவிக்கிறாய்
கேடு
இலாப் பொன் அடிக்கே விடுவிப்பாய் - முடிவில் அவர்களை அழிவில்லாத உன் பொன் போன்ற
திருவடிக்கு புகுவிக்கின்றாய்
அல்லாதார்
கெடுவிப்பாய் - நல்லோரல்லாதாரைக் கெடுவிகின்றாய்
குருகாவூர்
வெள்ளடை நீ அன்றே! - அத்தகையவன் குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் உறையும் நீயேயன்றோ
விளக்கவுரை:
சிவநெறியைப்
பின்பற்றி நின்னையே தொழும் அடியார்களை, மற்ற தெய்வங்களை வணங்கித் தொழும் அவசியம் இல்லாமல் அவர்களை
உனக்கே ஆட்கொள்வாய். நீ அணிவதோ தோலும், எலும்பு மாலையும். அனால் உன்னைத் தொழும் அடியார்களுக்கோ, நீ அணிவிப்பதோ, நல்லாடைகளையும்
பொன்னணிகலன்களையும். முடிவில் அவர்களை, அழிவில்லாத செவ்விய உன்
பொன் போன்ற திருவடிக்குள் புகுவிக்கின்றாய்.
உன் திருவடியை அடைந்த
அடியார்கள் ஒரு கேடும் எய்த
மாட்டார்கள். ஆனால், அவ்வாறு
அடையாதவர்களை (அல்லாதார்), அவர்கள் வினை
வழியில் உழலச் செய்து விடுகிறாய்! அத்தகையவன் குருகாவூர் வெள்ளடைக் கோயிலில்
உறையும் நீயேயன்றோ.
(சிவபெருமானை வேண்டுபவர்களுக்கு, இம்மையிலும் மறுமையிலும் என்றும் இன்பமே.
அவர் திருவடியை அடைந்தவர்களுக்கு என்றும் துன்பம் இல்லை.)
பாடல் 10:
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை,
இளங் கிளை ஆரூரன்-வனப்பகை அவள் அப்பன்-
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே .
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை,
இளங் கிளை ஆரூரன்-வனப்பகை அவள் அப்பன்-
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே .
பதவுரை:
வளம் -
மிகுந்த வளமும்
கனி
பொழில் - கனிகளைத் தரும் மரங்கள் கொண்ட சோலைகளையும்
மல்கு
வயல் - நிறைந்த வயல்களையும்
அணிந்து
- சூழப்பெற்று
அழகு
ஆய - அழகுடன் திகழும்
விளங்கு
ஒளி - வீசுகின்ற ஒளியினையுடைய
குருகாவூர்
வெள்ளடை உறைவானை - திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற
இறைவனை
இளங்
கிளை - சிங்கடி என்பவளின் தங்கையாகிய
வனப்பகை
- 'வனப்பகை' என்பவளுக்கு
அவள்
அப்பன் ஆரூரன் - தந்தையாம் நம்பியாரூரன்
உளம்
குளிர் - மனம் இன்புற்றுப் (பாடிய இந்த)
தமிழ்
மாலை - தமிழ் மாலை ஆகிய இந்த பதிகம்
பத்தர்கட்கு
- அவன் அடியார்கட்கு / சிவபக்தர்களுக்கு
உரை
ஆமே - அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும்
விளக்கவுரை:
வளப்பம்
மிகுந்த சோலைகளையும், நிறைந்த வயல்களையும்
சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற, வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக்
கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, சிங்கடிக்குத் தங்கையாகிய, 'வனப்பகை' என்பவளுக்குத் தந்தையாம்
நம்பியாரூரன், மனம் இன்புற்றுப் பாடிய
இத் தமிழ்மாலை, அவன் அடியார்கட்கு அவனைத்
துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும். இந்த
நம்பி ஆரூரன் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயில் இறைவனைப் பாடிய இந்த தமிழ் மாலையால் அடியார்கள்
சிவபெருமானை துதித்தால், இப்பாடல்களில்
சொல்லப்பட்ட அதனை பயன்களையும் அடைவார்கள்
(சிவபெருமானை வணங்கித்
தொழுதால், இக உலகில், நல்ல அபரிமித செல்வம், சிந்தனைத் தெளிவு, ஆனந்தம், நோயற்ற வாழ்வு, எம பயம் இல்லாமல் இருத்தல் போன்றவை சித்திக்கும். முடிவில்
சிவன் திருவடியைச் சேர்ந்து பரவுலகில் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம். இது சிவனின் அம்சமாக தோன்றிய சுந்தரர்
வாக்கு. சிவபெருமானின் வாக்கே!)
No comments:
Post a Comment